சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று முன் தினம் (செப்.,12) அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்த விபத்தில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு தாமாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்தது. விசாரணையில் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை கடுமையாகச் சாடியது.
பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராஜினாமா செய்த ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை ட்விட்டரில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “இளம் எஞ்சினீயர், சென்னையில் அரசியல் கட்சி பேனர் சரிந்து விழுந்து, லாரியில் சிக்கி பலியான சுபஸ்ரீ நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும். ஆனால், நாம் அவரை இழந்துவிட்டோம். பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய நேரம் இது” என உருக்கமாகக் குறிப்பிட்டு, #WhoKilledSubhasree எனும் ஹேஷ்டேக்கோடு பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரு தெற்கு மண்டல துணை காவல் ஆணையர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்தார்.
அதன்பிறகு பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டார். இரவு நேரங்களில் ரவுடிகளை பிடித்து எச்சரிக்கை விடுத்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதைத் தடுத்தார். இவர் கடந்த மே மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.