தி.மு.க இளைஞரணி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள குளங்களில் நீரை சேமிக்கும் வகையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது மற்றும் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் குளங்கள் தூர்வாருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனையடுத்து தி.மு.க இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கை பணியை வருகிற செப்டம்பர் 14ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தி.மு.க இளைஞரணி உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துருந்தார்.
இதுகுறித்து தி.மு.கழக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழக இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, "தமிழக இளைஞர்களுக்கு வணக்கம், நம் மொழி, இனம், கலாச்சாரத்துக்கு ஆதிக்க சக்திகளால் எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அரணாக இருந்து காத்து வருவது நம் கழகம்தான்.
இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில சுயாட்சி, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காத்தல்... இப்படி நம் இயக்கம் முன்னெடுத்த போராட்டங்களின் வழிவந்த தீர்வுகளால்தான் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
இதுபோன்ற போராட்டங்கள் மிகப்பெரிய வெற்றியடையக் காரணமாக இருந்ததில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்குண்டு. அவ்வளவு ஏன், திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அண்ணா அவர்களுக்கு வயது 40, கலைஞருக்கு 25, இனமான பேராசிரியருக்கு 26 வயது. இவர்களின் வழிவந்த நம் தலைவர் அவர்கள் தன்னை கழகத்தில் ஈடுபடுத்திக்கொண்டு களத்தில் இறங்கி உழைக்கத் தொடங்கும்போது அவரும் இளைஞரே.
இப்படியான இளைஞர்களால் கட்டிக்காப்பாற்றப்பட்ட தமிழகமும், ஏன் ஒட்டுமொத்த இந்தியத் தீபகற்பமுமே இன்று மிக ஆபத்தான சூழலை எதிர்நோக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கல்வியைக் காவி மயமாக்குதல், புதிய தேசிய கல்விக் கொள்கையை திணித்தல், இந்தியை மீண்டும் திணிக்க முயற்சித்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துதல், கார்ப்பரேட்களின் கைக்கூலியாகச் செயல்படுதல், வரலாறு காணத வகையில் பொருளாதாரத்தை சீரழித்தல், மாநிலங்களை மிரட்டி தன் கண் அசைவுக்கு ஏற்ப செயல்பட வைத்தல்... இப்படி எவ்வித சமூக நீதியுமின்றி, மாநில சுயாட்சியைக் காலில் போட்டு மிதித்து, ‘மதம்’ பிடித்த யானைபோல மனம்போனபோக்கில் அரசாட்சி செய்து வருகிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு.
இதை தட்டிக்கேட்டு, மாநிலத்துக்குத் தேவையான நீதியைப் பெறவேண்டிய அ.தி.மு.க அரசோ, பெயரளவுக்கு மட்டுமே திட்டங்களைத் தீட்டி கமிஷன் பெறுவதில் முனைப்புக் காட்டி வருகிறது. இந்த எடப்பாடி அரசு அமைந்தபோது நிகழ்ந்த கூத்து தொடங்கி, தற்போதைய அமைச்சர்களின் அமெரிக்கப் பயணம் வரை ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகூர்ந்தாலே, இது மக்களுக்கான அரசாக செயல்படவேமுடியாது என்பதை உணர்வீர்கள்.
எடப்பாடி அரசின் இந்த கூத்துகளைச் சிரித்துவிட்டுக் கடந்துவிட நம்மால் முடியவில்லை. ஏனென்றால் இந்த காமெடி அரசு, தமிழகத்தைப் பலநூற்றாண்டுகளுக்கு பின்னிழுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. நீட் தேர்வு, காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு என்று இந்த மக்கள் விரோத ஆட்சியின் அவலங்களை அடுக்கினால் பக்கங்கள் போதாது.
இப்படி, மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், திட்டங்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தி ஜனநாயகத்தைக் காக்க வேண்டியது நம் இளைஞர்கள் ஒவ்வொருவரின் கடமை. இந்த அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக நாம் மாறவேண்டும். அந்தப் பணியைத்தான் தி.மு.க இளைஞர் அணி செய்து வருகிறது. இந்தப் பணியை விரிவுபடுத்த, விரைவுபடுத்த தி.மு.கழகம் சார்ந்த, சாராத இளைஞர்களை நோக்கி நாம் பயணத்தைத் தொடங்கியுள்ளோம்.
ஆம், 25-08-2019 அன்று நடந்த இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும். நம் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும் தி.மு.க இளைஞர் அணியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளோம்.
செப்டம்பர் 14 தொடங்கி, நவம்பர் 14 வரையிலான இரண்டு மாத காலத்தில் தமிழகம் - புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சட்டமன்ற தொகுதி வாரியாக முகாம்களை நடத்தி உறுப்பினர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் தங்களை நம் இளைஞர் அணியில் உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள வேண்டுகிறோம்.
தங்களைப் பற்றிய அடிப்படைத் தகவல்களுடன் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினர்களாக இணையலாம். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்காதவர்கள் மட்டும் ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு உறுப்பினராகச் சேரலாம். இளைஞர் அணியில் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம். அவர்களும் தங்களின் உறுப்பினர் பதிவைப் புதுப்பிக்கும்போது மேற்சொன்ன அடையாள சான்றுகளை அளிப்பது அவசியம்.
இந்த உறுப்பினர் சேர்ப்பு முகாமை உங்களின் பிரதிநிதியாக இருந்து சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதிக்கு உட்பட்ட டாக்டர் தாமஸ் சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு வளாகத்தில் 14ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்குத் துவக்கி வைக்கிறேன். அதைத்தொடர்ந்து சைதாப்பேட்டையிலும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை தொடங்கி வைக்கிறேன்.
மேலும், இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகம், ராயபுரத்தில் உள்ள அறிவகம், முத்தமிழறிஞர் கலைஞரின் கோபாலபுரம் இல்லம், நம் கழகத்தின் தலைமையகமான அறிவாலயம், ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைவரின் இல்லம் ஆகிய இடங்களில் நடைபெறும் முகாம்களை பார்வையிடுகிறேன்.
இதில் இளைஞர் அணியைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, மாநில, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, தாய்க்கழக நிர்வாகிகளுடன் இணைந்து இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இதில் உங்களின் பணி குறித்துத் தெரிந்துகொள்ள மாவட்டக் கழக செயலாளர்கள், நம் அணியின் துணைச் செயலாளர்கள், அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பேன்.கொள்கை உறுதிகொண்ட இளைஞர்கள்தான் நம் கழக வளர்ச்சிக்கான உரம் என்பதை மனதில் கொண்டு இந்த உறுப்பினர் சேர்க்கையில் பங்கெடுக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என அவர் அதில் தெரிவித்துள்ளார்.