மதுரை ஒருங்கிணைந்த ஆவின் கூட்டுறவு சங்க தலைவராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இவரின் தேர்வு பெரும் விமர்சனங்களுக்குள் உள்ளானது.
இந்நிலையில், ஓ.ராஜா போலியான ஆவணங்களை கொண்டு விதிமுறைகளை மீறி ஆவின் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்று புகார் கூறி, முறையான தேர்தல் நடத்தவேண்டும் என்றும் தேனி மாவட்டம் பி.சி பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், “மதுரை மற்றும் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களை உள்ளடக்கியதாக மதுரை ஆவின் இருந்தது. கடந்தாண்டு நடந்த தேர்தலில் மதுரை ஆவின் உறுப்பினர்களாக 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா இருந்தார்.
கடந்த ஆக.22ம் தேதி மதுரை ஆவின் கூட்டுறவு சங்கத்தில் இருந்து தேனி மாவட்ட ஆவின் தனியாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது 4 பேர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். தேனி ஆவினுக்கு விதிப்படி முறையாக தேர்தல் நடத்தி தேர்வானவர்கள் மூலமே, தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்வு செய்ய முடியும். ஆனால் திடீரென விதிகளை மீறி தேனி ஆவினுக்கு 17 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதிலிருந்து, ஓ,ராஜா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஓ.ராஜா உள்ளிட்டோரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்கள் பணியாற்றத் தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ‘‘17 உறுப்பினர்கள், தலைவர் உள்ளிட்டோர், தற்காலிகமாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். பின்னர் முறைப்படி தேர்தல் நடத்தப்படும்’’ என கூறப்பட்டது.
வழக்கு விசாரணையைக் கேட்ட நீதிபதிகள், “தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா, தற்காலிக உறுப்பினர்கள் செயல்பட இடைக்காலத்தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆவினின் அன்றாட நடவடிக்கைகளை துணைப்பதிவாளர் மேற்கொள்ள வேண்டும்.
மனுவிற்கு பால்வளத்துறை பதிவாளர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர், தேனி ஆவின் துணை பதிவாளர், ஓ.ராஜா உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்.17ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.