சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நேற்று (செப்.,12) அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகனின் திருமணத்துக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பேனர்கள் வைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் பலமுறை உத்தரவும் எச்சரிக்கையும் பிறப்பித்தும் நிலைமை மாறியதாக இல்லை என்பதற்கு சுபஸ்ரீயின் மரணம் உதாரணமாக உள்ளது. குறிப்பாக மக்களின் பாதுகாப்புக்கு இயந்திரமாக இருக்க வேண்டிய ஆளுங்கட்சியே காரணம் எனும் போது மக்கள் மனதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பேனர் விழுந்ததால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஷேசாயி அமர்வு தாமாக முன்வந்து விசாரணையை கையில் எடுத்தது.
அப்போது, பேனர் வழக்கு தொடர்பாக ஏராளமான உத்தவுகள் பிறப்பித்தும் பலனில்லை, அரசின் நிர்வாகத்தை நாங்கள் செய்ய முடியாது. தலைமைச் செயலகத்தை உயர் நீதிமன்றத்துக்கு மட்டும்தான் நாங்கள் மாற்றவில்லை என காட்டமாக நீதிபதிகள் பேசியுள்ளனர்.
மேலும், அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே சென்னையில் இளம்பெண் உயிரிழந்ததற்கு காரணம். இன்னும் எத்தனை மனிதர்களின் ரத்தம் வேண்டும் என தமிழக அரசு கேள்வி எழுப்பி நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எங்களுக்கு அரசு மீதான நம்பிக்கை போய்விட்டது. ஏன் பேனர்கள் வைத்தால்தான் அமைச்சருக்கு வழி தெரியுமா? காது குத்துக்கும், திருமணத்துக்கும் பேனர்கள் வைத்தால்தான் விருந்தினர்கள் வருவார்களா?
காலையில் எழுந்ததும் அமைச்சர்கள் தத்தம் முகங்களை கண்ணாடிக்கு பதில் பேனர்களைதான் பார்ப்பார்களா? பள்ளிக்கரணையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க யார் அனுமதி அளித்தது? உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்துக்கு இந்த என பதில் சொல்லப் போகிறது?
இதுபோன்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அடுக்கக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தது மட்டுமல்லாமல், முதலமைச்சரை வரவேற்பதற்காக மெரினா சாலையில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிக்கம்பங்களை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் உடனடியாக ஆஜராகவேண்டும் என கூறி வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.