தமிழகத்தை பாலைவனக்காடாக மாற்ற மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காகவே ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற மக்கள் எதிர்ப்பு திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்கிறது. இது போன்ற திட்டங்களுக்கு மக்கள் பல்வேறு வகையில் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கிய மத்திய அரசுக்கு எதிராகவும், அந்த உரிமத்தை ரத்து செய்யக்கோரியும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “புதுக்கோட்டையில் உள்ள நெடுவாசல் மற்றும் காரைக்குடி ஆகிய பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லேபாரட்ரிஸ் மற்றும் பாரத் பெட்ரோ ரிசோர்ஸ் கம்பனிகளுக்கு மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு உரிமம் வழங்கியது”.
“அனைத்து வகையான ஹைட்ரோ கார்பன்களையும் ஒற்றை உரிமம் மூலம் எடுக்கும் விதமாக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது 2018-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெட்ரொலியம் மற்றும் இயற்கை வாயு சட்டத்திற்கு எதிராக உள்ளது.
மேலும், பூமிக்கு அடியில் இருக்கும் ஹைட்ரோ கார்பனை, சட்டப்படி அனுமதிக்கப்படாத ‘ஹைட்ரொலிக் ஃப்ராக்சன்’ முறைப்படி எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது”.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மனு குறித்து 8 வார காலத்திற்குள் மத்திய அரசு மற்றும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.