புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய 'இரணியன் அல்லது இணையற்ற வீரன்' நாடகம் ஆரிய- திராவிடர் இனப் பிரச்னையை முன்வைத்து, பழைய புராணங்களை புரட்டிப் போட்டு திராவிட இயக்கச் சிந்தனைகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட படைப்பாகும்.
இந்த நாடகம் 9.9.1934 அன்று ‘சீர்திருத்த நாடக சங்கத்தாரால், சென்னையிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் மாலை 5.30 மணிக்குப் தந்தை பெரியார் தலைமையில் நடந்தது. இதன்பின்னர் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற இந்த நாடகம் 1936, ஜூலை 4 இல் வாணியம்பாடிக்கு அடுத்த அம்பலூரில் 'அம்பலூர் நடன விலாசத்தில்' பாரதி சபையாரால் மீண்டும் நிகழ்த்தப்பட்டது.
அப்போது, நாடகத்திற்கு தலைமை தாங்கி பேசிய தந்தை பெரியார், ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’என்னும் சரித்திரத்தை தோழர் எஸ்.எ.அர்ஜூனன் அவர்கள் உபாத்திமையின் கீழ் நடத்திக் காட்டியுள்ளார்கள். இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜூனன் வெகு வீரமுடன் நடந்து கொண்டதைக் காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. ஆனால் தாடி இருக்கிறதே என்று யோசனையைக் கைவிட்டேன் என்றார்.
அத்தகைய பெருமைவாய்ந்த இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற இந்த நாடகத்தை மீண்டும் சென்னையில் நிகழ்த்த இருக்கிறார்கள் நவீன நாடகவியலாளர்கள். புதிய யுக்தியுடன், நவீன ஒலி-ஒளி அமைப்புகளுடன், வரும் 16ந் தேதி மாலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகக் கலையரங்கில் நடக்கிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் கலாச்சார அரங்கியல் நிறுவனத்திலும் நாடகக்கல்வி பயின்ற சி.ராமசாமி எனும் புதுச்சேரியைச் சேர்ந்த நவீன நாடக ஆளுமை இந்த நாடகத்தை இயக்கி உள்ளார். இந்நாடகத்தில் அறிவழகன், பிரேம்நாத், சுதன், டெல்பின் ராஜேந்திரன், மணி சுப்ரமணியன், அனுஷா பிரபு, பாபு, எம்.ஆர்.நேதாஜி ஆகிய நவீன நாடகவியலாளர்களும் நடிக்கிறார்கள். நாடகத்தின் இசையை சமணராஜா வடிவமைத்துள்ளார். விவேகானந்த ராஜா உரையாடலையும், சுதன்- பிரேம்நாத் ஒளியமைப்பையும் செய்துள்ளனர்.
இந்த நாடகம் இதற்குமுன்பு இதே ஆண்டு சென்னையிலும், புதுச்சேரியிலும் நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் மீண்டும் வரும் 16ந் தேதி நிகழ்த்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.