சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு 2ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரை, அதே கல்லூரியில் படிக்கும் நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கூடலூரை சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளிக் காலம் முதலே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்த மாணவி மற்றொரு மாணவருடன் பேசி வந்துளார். முன்னதாக முத்தமிழனுக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட மன கசப்புக்கு பிறகு, முத்தமிழின் நடவடிக்கை பிடிக்காமல் போனதால் மாணவி தொடர்பை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முத்தமிழன் இரண்டு நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து வந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மாணவி முத்தமிழனை திட்டிவிட்டு எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த முத்தமிழன் கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை மாணவியின் மீது வீசியுள்ளான். இந்த சம்பவத்தில் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதால் மாணவி வலியால் அலறி துடித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு இருந்த கல்லூரி ஊழியர்களும், மாணவர்களும் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திலேயே மாணவன் முத்தமிழனை பிடித்து தர்ம அடிக்கொடுத்தனர்.
பின்னர் போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் மாணவனைக் கைது செய்தனர். காயங்கள் இருந்ததால் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவனையும் சேர்த்துள்ளனர். போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.