மேலைநாடுகளில் சாலையோரத்தில் எச்சில் துப்பினாலோ, சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஏதேனும் செயலில் ஈடுபட்டாலோ உடனடியாக அபராதம், சிறை போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வருவது வழக்கம்.
அதேபோல், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரித்துள்ளார்.
இதற்கு முன்பாக, நீலகிரியில் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக 70 இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம்கள் நிறுவப்பட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுடனான கூட்டத்துக்குப் பின்னர் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகையிலை, பான், குட்கா, வெற்றிலை பாக்கு போன்றவற்றை துப்பினாலும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு, சுற்றுப்புறத்திற்கும் பாதுகாப்பாக அமையும் என இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.