6,491 குரூப் 4 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு நேற்று நடந்தது. நேற்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்துத் தேர்வு நடைபெற்றது . 32 மாவட்டங்களில் தாலுகா வரியாக மையங்கள் அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தேர்வை சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இத்தனை லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில், சில வினாக்கள் தவறாகவும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் இருந்தது போட்டித்தேர்வர்களை அச்சுறுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் ஒவ்வொரு தேர்விலும் இப்படி தவறான வினாக்கள் இடம்பெறுகின்றன. ஆனால், தவறைச் சரி செய்து, அடுத்து ஏற்படாமல் தவிர்க்க எந்த நடவடிக்கையையும் செய்ததாகத் தெரியவில்லை.
நேற்று நடைபெற்ற குரூப் 4 தேர்விலும் அப்படி, சில தவறான வினாக்கள் இடம்பெற்றுள்ளன. ஒரு கேள்விக்கான நான்கு தெரிவுகளில், ஆங்கிலத்தில், Dissolution of the 1st Lok Sabha என்று சரியாகத் தரப்பட்டுள்ளது. ஆனால், தமிழில் இதற்கு, 'குடியரசு தினம்' என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகள் குறித்து விளக்குகிறது? எனக் கேட்டு அதற்கு விடைத் தெரிவுகளாக a) 14 b) 19 c) 32 d) 51அ எனத் தரப்பட்டுள்ளது. இதே கேள்வி, ஆங்கிலத்தில் Which article of the Indian Constitution deals with fundamental rights? தரப்பட்டுள்ளது. தமிழ்க் கேள்வி, அடிப்படைக் கடமைகள் பற்றியது. ஆங்கிலத்தில் அது, அடிப்படை உரிமைகள் என இடம்பெற்றுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல் குறிப்புகளின்படி, ஆங்கிலம் - தமிழ் வினாக்களில் ஏதும் வித்தியாசம் இருப்பின், ஆங்கில வினாவே சரியானதாக கருத்தில் கொள்ளப்படும். இப்போது இதில் தமிழில் கேள்வி சரியாகவும், ஆங்கிலத்தில் தவறுதலாகவும் உள்ளது. இதற்கு என்ன வழிமுறை பின்பற்றப்படும் எனத் தெரியவில்லை.
இதேபோல மற்றொரு கேள்வியில், ஆங்கிலத்தில், மாநில வரிகள் (taxes) என்றும், தமிழில் மாநில வளங்கள் என்றும் இடம்பெற்றுள்ளது. இப்படி ஆங்காங்கே சில தவறுகள் இடம்பெற்று தேர்வர்களை குழப்பியுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாளில் இத்தனை பிழைகள் மலிந்திருப்பதற்கு ஆணையத்தின் அலட்சியமே காரணம் எனப் பலரும் குற்றம்சாட்டியுள்ளனர்.