சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி எஸ்.நாட்டாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மகள் கவுசல்யா பி.ஏ. ஆங்கிலம் படித்துள்ளார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தறித் தொழிலாளியான பூபதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கவுசல்யாவை பூபதி திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் பூபதியை அழைத்து காவல்துறை விசாரித்தபோது கவுசல்யாவை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பூபதி குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இதனை அறிந்து நேற்று காலை பூபதியின் வீட்டுக்குச் சென்ற கவுசல்யா தனது காதலனை அவருடைய உறவினர்கள் கடத்திச் சென்றுவிட்டதாக கூறி வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அவரது தந்தை சின்னத்துரையும் இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கவுசல்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் அவர், ''பூபதி என்னுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார். ஆனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவரை மிரட்டி கடத்தி சென்று வைத்துள்ளனர். என்னை அவருடன் சேர்த்து வையுங்கள்'' என்று கூறியுள்ளார்.
காதலன் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தீடீரென தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.