பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்க காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்கக் கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிட கோரியும் கிருஷ்ணபிரியா பவுண்டேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவிடும் வகையில் காவல்துறை, வழக்கறிஞர்கள், மருத்துவ அதிகாரிகள் அடங்கிய மையத்தை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் 32 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 15 மையங்கள் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும், மீதமுள்ள 17 மையங்களுக்கான பணியாளர் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அரசின் விளக்கத்தை பதிவு செய்த நீதிபதிகள், இந்த தேர்வு நடைமுறைகளை முடித்து, பணி நியமனத்தை ஒரு மாதத்தில் முடிக்க வேண்டுமென 17 மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பெண்களுக்கான உதவி மையங்களை அமைப்பதற்கு தேவையான இடங்களை ஒதுக்க வேண்டுமென மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்களுக்கும், மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிட்டனர்.
ஒதுக்கப்பட்ட அந்த இடங்களில் பெண்களுக்கான மையத்திற்கான கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுப்பணித்துறை செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல அந்த மையங்களில் காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதற்கான தகுந்த உத்தரவுகளை 15 நாட்களில் பிறப்பிக்க வேண்டுமென தமிழக டிஜிபி-க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெண்கள் உதவி மையங்களை அமைக்கும்படி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.