திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த ஆய்வுக் கூட்டம் ஒன்றில் ஆளுநரின் செயலாளர் பங்கேற்க இருப்பதால் பேராசிரியர்களை அழகாக உடை அணிந்து வருமாறு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.
இதற்கு பேராசிரியர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனிடம் கேட்டபோது, ஆளுநரின் செயலாளர் கலந்துகொள்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்திருக்கிறார்.
அமைச்சரின் இந்த பதில், மேலும் பரபரப்பை கூட்டிய நிலையில், இன்று காலை திருச்சி பாரதிதாசன் பல்கலையில் ஆளுநரின் செயலாளர் கலந்துகொள்ள இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆய்வுக் கூட்டங்களில் வேந்தர் தலைமையில் நடப்பதுதான் மரபு. ஆனால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆளுநரின் செயலாளர் பங்கேற்பார் என்றும், அதனால் பேராசிரியர்கள் அழகாக ஆடை அணிந்து வரவேண்டும் என்ற சுற்றறிக்கையுமே இந்த கூட்டம் ரத்தாகக் காரணம் என்று கூறப்படுகிறது.