நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர் ஷாலினி. இவருக்கும் கிறிஸ்துராஜபுரத்தைச் சேர்ந்த சசிகுமாருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்து, 3 குழந்தைகள் உள்ளனர்.
திருமணம் ஆன நாள் முதலே, வீட்டில் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என சசிகுமாரிடம் ஷாலினி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களைச் சொல்லி தொடர்ந்து தட்டிக்கழித்து வந்துள்ளார் சசிகுமார். இதுதொடர்பாக, இருவருக்கும் அவ்வப்போது சண்டைகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 25) கழிப்பறை கட்டாதது தொடர்பான வாக்குவாதம், சண்டையாக முற்றியுள்ளது. மனமுடைந்த ஷாலினி அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சசிகுமாரின் வீட்டார், ஷாலினியின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கொதித்துப்போன ஷாலினி குடும்பத்தினர், ஷாலினியின் கணவர் வீட்டார் அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக போலிஸில் புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, போலிஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழிப்பறை அமைத்துத் தராதது குறித்த சண்டையால் பெண் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அத்தியாவசியத் தேவையான கழிப்பறை அமைக்காதது அவர்களிடையே ஏற்படுத்தும் மன அழுத்தம் குறித்த விவாதங்கள் கிளம்பியுள்ளன.
திறந்தவெளி கழிப்பிடங்களால் சுகாதாரக் கேடு ஏற்படுவதோடு, கடுமையான மன உளைச்சலும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் கழிப்பறை கட்ட மானியம் அளித்து வருகின்றன. ஆனாலும், அரசுகளால் கழிப்பறை விஷயத்தில் தன்னிறைவை அடைய முடியவில்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.