தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கிராமத்தில் உள்ள ஜக்கம்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் அப்பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருகிறார். நெசவுத் தொழிலாளி பாண்டியனும், அதேபகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் பெருமாள் நேற்றிரவு பாண்டியனை மது குடிப்பதற்காக அழைத்துள்ளார். அதனையடுத்து இருவரும் டாஸ்மாக் சென்று கண்மூடித்தனமாக குடித்துவிட்டு மது போதையில் ரோட்டில் பேசியபடி நடந்து வந்துள்ளனர்.
அப்போது ராஜதானி பகுதியில் நடந்து வரும்போது திடீரென பாண்டியனை பெருமாள் அடித்து கீழே தள்ளியுள்ளார். மது போதையில் இருந்த பெருமாள் என்ன செய்கிறார் என்று பாண்டியன் சுதாரிப்பதற்குள் அருகில் இருந்த கல்லை எடுத்து பெருமாள் தாக்கியுள்ளார்.
கல்லை கொண்டு மூர்க்கமாகத் தாக்கிய பின்னர், அங்கிருந்து பெருமாள் தப்பி ஓடியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டியனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார், தப்பி ஓடிய பெருமாளை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர். எதற்காக கொலை நடந்தது என்பது குறித்து பெருமாளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.