தஞ்சாவூர் மாவட்டம் செந்தலைப்பட்டினம் கிராமத்தில் 2000 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கொடுத்து சில்லறை வாங்க முயன்ற இரண்டு பா.ஜ.க-வினரை கிராம மக்களே பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர், செந்தலைப்பட்டினம் கிராமத்தில் யாசின் என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அங்கு நேற்று பொருள் வாங்க இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது, 2 ஆயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்து பொருட்களை வாங்கிய பிறகு, மீதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாகச் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் அவர்கள் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் வித்தியாசமாக இருப்பதைக் கண்ட கடை உரிமையாளர் அந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளார். ஆனால், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால், அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து அங்கு கூடிய கிராம மக்கள், இருவரையும் மிரட்டி விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த அந்த இரு இளைஞர்களும், “நாங்கள் யார் தெரியாமல் எங்களை மிரட்டாதீர்கள்” என கூறியுள்ளார்கள். மேலும் விசாரித்ததில், அவர்கள் இருவரும், “ நாங்கள் பா.ஜ.க உறுப்பினர்கள். தேவையில்லாமல் எங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். மரியாதையாக விட்டுவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் கூடி அவர்களை அதே இடத்தில் சிறை பிடித்தனர். அப்போது இதேபோன்று பல ஊர்களில் இவர்கள் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து போலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ள நோட்டு அதிகரித்துவிட்டது என்கிற காரணத்தைச் சொல்லி மூன்று ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். ஆனால், தற்போது பா.ஜ.க-வினரே கள்ள நோட்டை மாற்றி போலிஸில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.