சென்னையில் நாளுக்கு நாள் செல்போன், தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தேனாம்பேட்டை பகுதியில் காதல் ஜோடி ஒன்றி சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்களிடம் செல்போனை பறித்துச் சென்ற வீடியோ வெளியானது.
இந்த நிலையில், வட சென்னையின் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி செல்போன் மற்றும் தங்கச் செயின் பறிப்பு நடப்பதாக போலிஸாருக்கு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து களத்தில் இறங்கி மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த போது ஒரே ஒரு நபர் தான் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அதில், இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர் ஒருவர் தனியாக நடந்துச் செல்லும் பெண்களை குறிவைத்து அவர்கள் அருகே சென்று கண் இமைக்கும் நேரத்தில் தங்கச் சங்கிலியை அறுத்துச் செல்கிறார். இதே போன்று தண்டையார்பேட்டை, வண்ணார்ப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கைவரிசையை காட்டியிருக்கிறார்.
ஆகையால், தொடர் செயின் பறிப்பில் ஈடுபடும் நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படையின் வலையில் திருடன் சிக்கியுள்ளான். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது சாத்தாங்காடுவைச் சேர்ந்த கார்த்தி என்பது தெரியவந்தது. மேலும், பல்வேறு குற்ற வழக்குகளில் கார்த்தி தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, இரவு நேரங்களில் மட்டுமே செயின், செல்போன்களை பறிப்பில் ஈடுபடுவதாகவும், தனியாக செல்லும் பெண்களே தனது குறி எனவும் கார்த்தி வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளான். மேலும், எந்த பெண்ணாவது செல்போனை பேசிக்கொண்டு சென்றால் கழுத்தில் இருக்கும் செயினை அறுக்க சுலபமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட செயின்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலிஸார், இரவு நேரங்களில் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.