சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியை சேர்ந்தவர் சாத்ராக். இவர், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள இந்திய வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்து ரூ.30,000 பணத்தை எடுக்க சென்றிருக்கிறார்.
பணத்தை எடுத்த பிறகு தனது வங்கிக் கணக்கு முகவரியை மாற்ற வேண்டும் என வங்கி மேலாளரை அணுகிய அவரிடம், தற்போது உள்ள குடியிருப்பின் முகவரிக்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மேலாளர் கூறியுள்ளார்.
அப்போது, சாத்ராக்கின் அருகே இருந்த நபர், தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் முகவரியை மாற்றித் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சாத்ராக் தனது வங்கிக் கணக்கு புத்தகத்தை அளித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து, வங்கியில் இருந்து எடுத்த பணத்தின் வரிசை எண் சரியாக உள்ளதா எனக் கேட்டு சாத்ராக்கை திசை திருப்பி, தனது அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, அருகே உள்ள பள்ளியின் வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் அந்த மர்ம நபர்.
அங்கு, பணத்தின் வரிசை எண் சரிபார்ப்பது போல நடித்த அந்த நபர், 10 ரூபாய் ஸ்டாம்ப் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு 30 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பியோடியுள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை வெகு நேரம் காத்திருந்த பிறகு சாத்ராக் உணர்ந்துள்ளார். இதன் பிறகு, தனது பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றது தொடர்பாக அண்ணா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சாத்ராக்.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து பணத்தை எடுத்துச் சென்ற மர்ம நபர் குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கியின் வளாகத்திலேயே வங்கி ஊழியர் போன்று நடித்து பணத்தை அபேஸ் செய்த சம்பவம், பண பரிவர்த்தனை நேரங்களில் வாடிக்கையாளர்கள் உஷாராக இருக்கவேண்டும் என்ற எச்சரிக்கை மணியை மீண்டும் ஒருமுறை ஒலிக்கவிட்டுள்ளது.