தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் தண்ணீர் பிரச்னைதான் தற்போது தலைப்புச் செய்தியாகி உள்ளது. மழை பெய்வது ஒருபக்கம் இருந்தாலும் மக்கள் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் மக்கள் ஒருநாள் பயன்பாட்டுக்குக் கூட தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் லாரிகளில் வரும் தண்ணீரை பிடித்து சேமித்து வருகின்றனர். தண்ணீருக்காக சில பகுதிகளில் அடிதடிகள் கூட நடந்தேறியுள்ளது.
இதனையடுத்து மழைநீரை சேகரிப்பதன் அவசியம் குறித்து மக்கள் உணர்ந்ததால் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீரை சேமித்து வைத்து அதனை உபயோகித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தனியார் தண்ணீர் லாரிகள் மூலம் வாங்கப்படும் தண்ணீருக்கான விலையும் ஆயிரக்கணக்கில் இருப்பதால் மக்கள் மழைநீரை மட்டுமே நம்பி இருக்கவேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், மழைநீர் சேகரிப்பு கூட்டமைப்பு தொடர்பாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையின் போது மழைநீரை சேகரிப்பதற்காக தமிழகத்தில் உள்ள வீடுகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேமிப்பு தொட்டிக்கான அமைப்பை கட்டாயம் நிறுவ வேண்டும்.
இந்த மழைநீர் சேமிப்பு அமைப்பை நிறுவுவதற்கு மூன்று மாதங்கள் கெடு விதித்திருப்பதாகவும், அவ்வாறு அமைக்காவிடில், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டிடங்கள் மட்டுமல்லாமல் சாலையோரங்களிலும் மழை நீரை சேமிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.