தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் பருவமழையின் காரணமாகவும், வடக்கு மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆம்பூர், வாணியம்பாடியில் மழை கொட்டித் தீர்த்து வருவதால் அங்குள்ள ஜலகம்பாறை நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
இதனையடுத்து ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ள நீர் ஆறு போல் ஓடுகிறது. இதில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் கடுமையாக சிரமத்துக்கு ஆளாகியுள்ளனது.
நெடுஞ்சாலைகளே இந்த அளவுக்கு மோசமாக உள்ளபோது கிராமங்களில் உள்ள சாலைகள் எந்த அளவில் போடப்பட்டிருக்கும் எனவும், நேரடியாக அரசு தலையிடாமல் ஒப்பந்ததாரர்கள் மூலம் சாலைகள் அமைக்கப்படுவதால் முறையானதாக இல்லை என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.