தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒன்றான தேனி மாவட்டம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவர மத்திய பா.ஜ.க அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய அ.தி.மு.கவையும் பயன்படுத்தி வருகிறது.
நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்பட்டால் தொன்மைவாய்ந்த கடின பாறைகள் நிறைந்த மேற்குத்தொடர்ச்சி மலை கடுமையான சுற்றுப்புற சீர்கேட்டிற்கு ஆளாகும் எனப் பல இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக பிரசாரப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் 3 நாட்கள் பிரசாரப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தும் இருந்தார்.
நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த லெனின் ராஜப்பா, பொன்னையன், திருமுருகன் காந்தி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் மற்றும் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் ஆகியோர் இந்த பிரசாரப் பயணத்தில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக மதுரை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட வைகோவை பரிசோதித்த மருத்துவர்கள், உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் ஓய்வு எடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால், நியூட்ரினோ எதிர்ப்புப் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.