மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இன்று அதிகாலை கடையைத் திறந்த மாரிமுத்துவு, இது தன் வாழ்வின் இறுதி நாள் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். கடை திறந்த சிறிது நேரத்தில் 6 இளைஞர்கள், டீ குடிக்க வந்துள்ளனர். டீயை இப்போது கொடுக்குமாறும் பணத்தை பிறகு வாங்கிக் கொள்ளுமாறும், அந்த இளைஞர்கள் கேட்டுள்ளனர். மாரிமுத்து இதற்கு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி , பாட்டில் உள்ளிட்டவைகளால் மாரிமுத்துவை தாக்கினர். உயிருக்கு பயந்து தப்பியோட முயன்ற மாரிமுத்துவை விரட்டி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இலவசமாக டீக்கொடுக்க மறுத்த டீக்கடைக்காரரை படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மதுரையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
படுகொலை செய்யப்பட மாரிமுத்துவுக்கு அமுதா என்ற மனைவியும், முத்துமகாராஜா என்ற மகனும், முத்துமகரிஷி என்ற மகளும் உள்ளனர். முன்னதாக, குறிப்பிட்ட இளைஞர்கள் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.