சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர் புகார்கள் பதிவாகி வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காதல் ஜோடி ஒன்று சென்னை சாலைகளில் நடந்து செல்லும் பெண்ணிடம் இருந்து செல்போன் பறித்த சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி பரபரப்பை ஏடுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரசன்னா லிப்சா என்ற இளம்பெண்ணிடம் இருந்து பைக்கில் சென்ற ஜோடி ஒன்று செல்போன் பறித்துள்ளது. இதனையடுத்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பிரசன்னா லிப்சா புகார் அளித்துள்ளார்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பைக்கில் செல்லும் போது செல்போன் பறித்திருப்பதும், அவரது பின்னால் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருப்பதும் பதிவாகியுள்ளது.
அதை அடிப்படையாக வைத்து நடத்திய விசாரணையில், செல்போனை பறித்தவர்கள் இருவரும் காதலர்கள் என்பதும், அவர்கள் சூளைமேட்டைச் சேர்ந்த ராஜு, தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் ஸ்வாதி என்றும் தெரியவந்ததை அடுத்து அவர்களை போலிஸார் கைது விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் கொடுத்திருக்கும் வாக்குமூலம் போலிஸாருக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்திருக்கிறது. ஸ்வாதிக்கும் ராஜுவுக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருசக்கர வாகனங்களை திருடி அவற்றை விற்று வரும் பணத்தின் மூலம் கஞ்சா வாங்கி புகைப்பதைப் பழக்கமாக வைத்துள்ளார் ராஜு. பின்னர் ராஜு ஸ்வாதிக்கும் கஞ்சாவை அறிமுகப்படுத்தியுள்ளார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த ஸ்வாதி, மது அருந்தியதற்காக விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், சைதாப்பேட்டையில் ஸ்வாதியும் ராஜுவும் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஸ்வாதியை பைக்கில் ஏற்றிச் சென்ற ராஜூ தேனாம்பேட்டையில் நடந்து சென்றுகொண்டிருந்த லிப்சாவிடம் செல்போனை பறித்துள்ளார். திருடிய செல்போனை சென்னை பர்மா பஜாரில் விற்றுள்ளனர். பின்னர், அதில் கிடைத்த பணத்தில் கஞ்சா மற்றும் மது வாங்கி இருவரும் உல்லாசமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ராஜூவின் மேல் ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் இருப்பதாகவும், சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சின்ன சின்ன திருட்டுகளில் இருவரும் ஈடுபட்டு வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.