தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆலைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைகை ஆஜரானார். அப்போது அவர், விவசாயப் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து அந்த கிராம மக்கள் வழக்குத் தொடர அவர்களுக்கு அனுமதி உள்ளது.
இந்தியாவில் உள்ள அபாயகரமான மாசுகளை ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. 1993ம் ஆண்டு சிப்காட் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிப்காட் பகுதியில் 90 சதவீத நிலம் ஸ்டெர்லைட் ஆலையால் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் வாதிட்டார்.
அவரது வாதத்துக்கு ஸ்டெர்லைட் ஆலை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் எதிர்ப்புத் தெரிவித்தார். அபாயகரமான ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இடம் அளித்தது எப்படி என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.