கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த முதலைப்பட்டி கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பதற்காக போராடிய வீரமலை (70), அவரது மகன் நல்லதம்பி ஆகிய இருவரும் கடந்த ஜூலை 29ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, முதலைப்பட்டியில் நடந்த படுகொலை தொடர்பாக விசாரிக்க களத்துக்கு சென்ற எவிடன்ஸ் அமைப்பினருக்கு அங்கு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதில், முதலைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 198 ஏக்கர் கொண்ட நீர் நிலைகளை 50 பேர் ஆக்கிரமிப்பு செய்ததால் அவை முற்றிலும் வறண்டு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பியதில் 50 ஏக்கர் நிலத்தை மட்டும் விட்டுவைத்துவிட்டு எஞ்சியுள்ள பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்த திடுக்கிடும் தகவல் வீரமலைக்கும், நல்லதம்பிக்கும் தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அக்டோபர் 2018ல் வீரமலை தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. அதன் பின்னர், கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது கரூர் மாவட்ட ஆட்சியருக்கும், குளித்தலை வட்டாட்சியருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள், வழக்கு தொடுத்த வீரமலை மற்றும் நல்லதம்பியை கடந்த ஜூலை 29 அன்று 6 பேர் கொண்ட கும்பலை ஏவி படுகொலை செய்தனர். சமூக ஆர்வலர்களை கொலை செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் என எவிடன்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மனித உரிமை காப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 38 மனித உரிமை காப்பாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என எவிடன்ஸ் கதிர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால், மனித உரிமை காப்பாளர்களுக்கு என்று தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இது அரசின் கடமை எனக் கூறிய அவர், அதற்கான பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.