காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய வி.வி.ஐ.பி-க்கள் செல்லும் வழியில் காவல்துறை அதிகாரி ஒருவர் சிறப்பு ஆவணம், நுழைவுச்சீட்டு எதுவும் இல்லாமல் அனுமதிப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீரென வி.வி.ஐ.பி நுழைவு வாயிலை ஆய்வு செய்தார். அங்கு இருந்த சிலரிடம் எந்த வித நுழைவுச்சீட்டும் இல்லாமல் வரிசையில் நின்றுள்ளார்கள்.
மேலும் அவர்களை காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதித்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்சியர் பொன்னையா அந்த ஆய்வாளரைக் கையும் களவுமாக பிடித்து கடுமையாகத் திட்டினார். உடனடியாக காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ய ஐ.ஜிக்கு உத்தரவிட்டார்.
கோபத்தின் உச்சியில் ஆய்வாளரை கடுமையான வார்த்தைகளாலும், ஒருமையிலும் திட்டிப் பேசும் ஆட்சியரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பதிவிட்டனர்.
காவலர் தவறு செய்திருந்தால் அவரை தனியாக அழைத்துச் சென்று எச்சரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் பொது இடங்களில் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஆட்சியர், ஒரு அரசு அதிகாரியை இப்படி திட்டுவது சரியா? இது அந்த காவலருக்கு எவ்வளவு மன உளைச்சல் உண்டாகியிருக்கும் என சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வந்தது.
மேலும், ஆட்சியர் தனது குடும்பத்தினரை அனுமதி பெறாமல் வி.வி.ஐ.பி வரிசையில் அழைத்துச் செல்லும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், மாவட்ட ஆட்சியருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இருந்ததாகவும் பொன்னையா மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
இதனிடையே தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, காவல் ஆய்வாளரை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், “பாதுகாப்பு பணியில் அதிகப்படியான குளறுபடிகள் இருந்ததால் கோபப்பட்டுவிட்டேன். இனி இதுபோல தவறுகள் நடக்காது” என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா வருத்தம் தெரிவித்துள்ளார்.