ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வகையில் எதிர்ப்பலைகள் வீசி வருகிறது. மேலும், காஷ்மீருக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ரத்து செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததற்கு எதிராக, காஷ்மீரின் தேசிய மாநாடு கட்சியைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடந்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கேரளா, கர்நாடகா, காஷ்மீர் என பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 5 மாணவிகள் உட்பட 30 மாணாக்கர்கள் இணைந்து காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்துக்கு எதிராகவும், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஒட்டியதால் வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
” காஷ்மீரிகளான எங்களுக்கு புல்லட்களின் மூலம் தான் மரணம்” என காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். மற்றொருபுறம், “ காஷ்மீரைச் சேர்ந்த எங்கள் சகோதர, சகோதரிகளே #WeStandWithYou" என்றும் அச்சத்தில் உள்ள சக காஷ்மீரி மாணவர்களுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இதனையடுத்து, 30 மாணவ மாணவிகளிடம், துண்டு பிரசுரம் ஒட்டியது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் விளக்க கேட்கப்பட்டுள்ளது.