நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்படைய செய்துள்ளது. மழை குறைந்த போதிலும் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல்வேறு கிராமங்களும் தண்ணீரில் தத்தளிக்கிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 135 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவலாஞ்சி பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் வழங்குதல், மீட்பு பணி நடந்து வருகிறது.
நிலச்சரிவு, மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. குன்னூர் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கூடலூர் பகுதியில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் மக்களும் ஒருவாரமாக வீட்டில் மக்கள் முடங்கிப்போய் உள்ளனர்.
தற்காலிகமாகப் பயன்படுத்த மரப்பாலம் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அரசு எந்த வித நடவடிக்கையை எடுக்காத நிலையில் மக்களே பாலம் அமைக்கும் முயற்சியில் இறங்கினர். அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மரப்பாலம் அமைக்கும் பணி ஈடுபட்டனர். அரசு விரைவில் கான்கீரிட் பாலம் அமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.