விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சிங்கனூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி. இவரது மகன் அலெக்சாண்டர், மயிலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
அங்கு உடன் பணிபுரியும் ஜெகதீஸ்வரி என்ற ஆசிரியை உடன் காதல் ஏற்பட்டு, இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்துக்கு முடிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, செப்டம்பர் 2ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக முடிவெடுத்து ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு திருமண வேலைகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அலெக்சாண்டரின் தந்தை தெய்வமணி நேற்று (ஆகஸ்ட் 9) திடீரென உயிரிழந்தார். இதனால், இரு குடும்பத்தாரும் ஆழ்ந்த துக்கத்துக்கு உள்ளாகினர்.
தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட அலெக்சாண்டருக்கு அவரது மறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தனது திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் தனக்கு ஆசி புரியாமல் திடீரென தந்தை இறந்துவிட்டதை எண்ணி பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளார்.
இருப்பினும், தனது தந்தையின் முன்னிலையில்தான் திருமணம் நடந்தாகவேண்டும் என்று எடுத்த முடிவில் திண்ணமாய் இருந்த அலெக்சாண்டர் பெண் வீட்டாரை போராடி சம்மதிக்க வைத்து உயிரிழந்த தனது தந்தைக்கு புத்தாடை உடுத்தி அமரவைத்து, அவரது உடல் முன்பு ஜெகதீஸ்வரியை திருமணம் செய்துகொண்டார் அலெக்சாண்டர்.
இந்த நிகழ்வு அவர்களது உறவினர்கள் மட்டுமில்லாது, திண்டிவனம் வட்டார மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.