கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குப் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று (ஆகஸ்ட் 8) 82 செ.மீ மழை பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 91.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் பதிவான அதிகபட்ச மழை அளவு இதுவாகும்.
மழை காரணமாக அவலாஞ்சியில் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வலாஞ்சி, பைக்காரா, கெத்தை, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி, இந்த அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று நான்காவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி பைக்காரா அருகே வீடு இடிந்து விழுந்ததில் 8 மாத குழந்தை உயிரிழந்தது. ஊட்டி அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இன்று காலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அவலாஞ்சி வந்துள்ளனர்.
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் மழை - வெள்ளத்துக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.