முத்தமிழறிஞர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்காக சிந்தித்து, செயல்பட்டு, தன்னுடைய வாழ்க்கையை அற்பணித்துக் கொண்டவர் கலைஞர். அவருடைய இழப்பு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கான இழப்பு” என்றார்.
மேலும் காஷ்மீர் பிரச்னை குறித்துப் பேசிய அவர் “ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கியது மிக மோசமான நடவடிக்கை. இது ஜனநாயகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்தியாவின் ஒரு பகுதிதான் ஜம்மு காஷ்மீர் என்று சொல்வது அப்பட்டமான பொய், இது வரலாற்றுப் புரட்டு.
சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த மக்கள் அமைதியாக வாழ்ந்து வருகிற நேரத்தில் சிறப்புரிமையை நீக்கியிருப்பது காஷ்மீர் மக்களுக்கு செய்கிற துரோகம்.
திடீரென இந்தச் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, யூனியன் பிரதேசமாக மாற்றியிருப்பதற்கான காரணம் ஒன்று வரலாற்று அறியாமையாக இருக்கும், அல்லது மோசமான பாசிச ஆட்சியாக இருக்கும். பா.ஜ.க-வின் இந்த எதேச்சதிகாரப் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த மசோதா அவையில் நிறைவேற்றப்படும்போது எங்களைப் போன்ற எம்.பி-க்கள் பேசுவதற்கு தொடர்ந்து இரு அவைகளிலுமே அனுமதி மறுக்கப்பட்டுத்தான் வருகிறது. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஒரு சர்வதேச பிரச்னை.
ஜம்மு காஷ்மீரில் இனிமேல் நிலம் வாங்கலாம் எனச் சொல்கிறார்கள். அங்கு போய் மக்கள் யாரும் நிலம் வாங்கப் போவதில்லை. தமிழகத்தை ஏற்கனவே சூறையாடிக் கொண்டிருக்கும் அம்பானி, அதானி குழுமங்களும் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் தான் அங்கு நிலம் வாங்கப் போகிறார்கள். அங்குள்ள மலை மற்றும் இயற்கை வளங்களைச் சுரண்டப் போகிறார்கள்.” என்றார்.
மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக அமித்ஷாவை சந்தித்துப் பேசியபோது இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும், இதுகுறித்து மேல்மட்ட தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்ததாகக் கூறினார்.
மேலும், எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பிரதமர் மோடியை சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்தார்.