ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மாநிலங்கவையில் நிறைவேறியது.
இதனால் இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் தங்களது எல்லையில் அத்துமீறல், ஊடுருவல் ஆகியவற்றை தடுக்கும் நடவடிக்கையாக அதிகளவு ராணுவ வீரர்களை குவித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. பா.ஜ.க, தன்னுடையை அதிகாரத்தைப் பயன்படுத்தி தவறான முடிவுகளை செயல்படுத்துகிறது என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் தமிழகத்தில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஜனநாயக அமைப்பினர், இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போராடுபவர்களை ஒடுக்கும் வகையில் பா.ஜ.க அரசு முடிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க ஐ.பி.எஸ் அதிகாரிகளின் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி திரையரங்குகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சோதனையில் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து தரப்பினரையும் போலீசார் விசாரித்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில், சில இடங்களில் பொதுவெளியில் உடமைகளை சோதனை செய்வதால் பயணிகள் கடும் சங்கடத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் திரையரங்க பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்துச் சென்று விசாரணை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. தமிழக போலீசாரின் இந்த கெடுபிடி விசாரணையால் பொதுமக்கள் அச்சமடைந்திருக்கிறார்கள். போலீசார், பொதுமக்களை அச்சுறுத்தும்படி நடந்துகொள்ளக்கூடாது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.