சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்தவர் தமிழ் செல்வன். இவர் கால்டாக்சி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை பணி முடிந்து வீடு செல்வதற்காக எம்.எம்.டி.ஏ பகுதியில் வந்த அவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் சவாரிக்கு வரும்படி அழைத்துள்ளனர்.
செல்போன் மூலமாக மட்டுமே சவாரி ஏற்கப்படும் என்று கூறிய தமிழ்ச்செல்வன், தான் தற்போது வீட்டிற்கு செல்வதாகக் கூறி அங்கிருந்து புறப்பட்டு கோயம்பேடு செல்வதற்காக சாலையில் யூ-டர்ன் போட்டு வந்துள்ளார்.
அப்போது சாலையை கடந்து வந்த அந்த இரு இளைஞர்களும் தமிழ்செல்வனை மடக்கி, காரின் கதவை திறந்து தாக்கியுள்ளனர். பின்னர் தமிழ்செல்வனின் பர்ஸ் இருந்த சுமார் 4000 ரூபாய் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். இதனால் மற்றொரு செல்போன் மூலம் அவசர உதவி எண் 100க்கு தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுக்க முயற்சித்துள்ளார். இதைப் பார்த்த இளைஞர்கள் நடுரோட்டிலேயே தமிழ்செல்வனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக தமிழ் செல்வன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் குறைவான சென்னையின் புறநகர் பகுதிகளில் கால் டாக்சி ஓட்டுநர்களிடம் இதுபோல பல வழிப்பறி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. வாடிக்கையாளர்கள் போல கால் டாக்சியில் ஏறும் கொள்ளையர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியை நோக்கி ஓட்டுநரை வழிநடத்திச் செல்கின்றனர். குறிப்பிட்ட பகுதிக்கு சென்றதும் ஓட்டுநரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டி, பொருட்களை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் கால் டாக்சியே கடத்தப்பட்டதும் உண்டு. ஆனால், சென்னையின் மிக பரபரப்பான கோயம்பேடு பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் கால் டாக்சி ஓட்டுநர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.