தமிழ்நாடு

ரூட்டு தல மோதல்: மாணவன் அளித்த சிசிடிவி காட்சி; அதிர்ந்து போன காவல்துறை...ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

சென்னையில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களில் மதன் என்ற மாணவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத மதனை காவல் துறை கைது செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ரூட்டு தல மோதல்: மாணவன் அளித்த சிசிடிவி காட்சி; அதிர்ந்து போன காவல்துறை...ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில், ரூட் தல யார் என்று ஏற்பட்ட மோதலில் பட்டா கத்திகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மாதம் நடந்த இந்த சம்பவத்தையடுத்து ,வெளிவந்த விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. மாணவர்களின் இந்த செயல் அச்சுறுத்துலாக இருப்பதாக பல தரப்பிலும் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டது.

இந்த மோதலில் காயமடைந்த 7 மாணவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. வீடியோ ஆதாரம் கொண்டு, இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ், சரவணன் மற்றும் மதன் ஆகிய 3 மாணவர்களை கைது செய்தது காவல்துறை. கைது செய்யப்பட்ட அடுத்த நாளே மாணவர்கள் கையில் கட்டுபோட்ட படி இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின. கைது செய்து அழைத்துச் செல்லும்போது, தப்பிக்க முயற்சி செய்து கீழே விழுந்ததால், அவர்கள் மூவரின் கைகளும் முறிந்ததாக தெரிவித்தது காவல் துறை.

மேலும் போலீசாரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து பலரும் “அதெப்படி, சொல்லி வைத்தது போல தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் கைகள் உடைக்கப்படுகின்றன?” என ஒருபுறம் சந்தேகக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அதனை காவல்துறை பொருட்படுத்துவதாகவும் தெரியவில்லை.

கைதான மூன்று மாணவர்களும் ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். முதலில் நீதிமன்றம் அவர்களின் மனுக்களை ஏற்க மறுத்துவிட்டது. ஆனால், மதன் என்ற மாணவர் தரப்பில் நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று மதன் அந்த இடத்தில் இல்லை என்றும், கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவர் சரிவரக் கல்லூரிக் கூட செல்லவில்லை என மதனின் தாய் நீதிமன்றத்தில் கூறினார். அதை நிரூபிக்கும் வகையில், மதன் தன் சொந்த ஊரான பெரியபாளையத்தில் இருந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் சமர்ப்பித்தனர்.

மாணவர்களின் மோதல் ஜூலை 23-ம் தேதி பிற்பகல் 2 மணிபோல நடைபெற்றது. ஆனால், 1.15 மணிக்கு மதன் பெரியபாளையத்தில் இருந்தது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

மதன் &  ஆகாஷ்
மதன் & ஆகாஷ்

சம்பவத்துக்கு தொடர்பே இல்லாத, வீட்டிலிருந்த தன் மகனை கைது செய்து, போலீசார் கையை உடைத்துள்ளனர் என மதனின் தாயார் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட நீதிபதி, ”எந்த அடிப்படையில் மதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது” என போலீசாரை நோக்கி கேள்வி எழுப்பினார். மதனுக்கு ஜாமீனும் வழங்கினார். ஆனால், மற்ற இரண்டு மாணவர்களின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணையில், எந்த அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் காவல்துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories