தமிழ்நாடு

நில பத்திரத்தை தர மறுத்த வங்கி : விரக்தியில் வங்கி முன்பு பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை!

நில பத்திரத்தை திருப்பிக்கேட்டு, வங்கி நிர்வாகம் தர மறுத்ததால், வங்கி முன்பு பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

நில பத்திரத்தை தர மறுத்த வங்கி : விரக்தியில் வங்கி முன்பு பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தை சேர்ந்த விவசாயி பூபதி, தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய பால்பண்னை தொழிலை மேம்படுத்துவதற்காக கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நண்பர்களுடன் இணைந்து கடன் பெற்றுள்ளார்.

நில பத்திரங்களை வைத்து கடன் பெற்ற அவரால், பால்பண்ணை லாபகரமாக இயங்காததால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் சுமை கழுத்தை நெரிக்கவே, கூட்டுத்தொழிலில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்த பூபதி தனது நண்பர்களிடம் இதுகுறித்துத் தெரிவித்துள்ளார். அவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே, கடன் தொகையையும், வட்டித்தொகையையும் செலுத்தாததால், அதை வராக்கடன் பட்டியலில் வங்கி நிர்வாகம் சேர்த்துள்ளது. இதனையடுத்து நில பத்திரங்கள் ஏலத்திற்கு வரும் என்பதால், தனது தொழில் கூட்டாளிகளிடம் கடனில் தனது பங்கை திருப்பி கொடுத்துவிடுவதாகவும், தனது நிலப்பத்திரத்தை பெற்றுத்தருமாறும் பூபதி கேட்டுள்ளார்.

அவர்கள் இதுகுறித்துப் பேச வங்கிக்கு வர ஒத்துழைக்காத நிலையில், வங்கியில் கொடுத்த பத்திரத்தை மீட்பதற்காக சென்றுள்ளார் பூபதி. முழு கடனையும் திருப்பி செலுத்தினால்தான் பத்திரம் தரப்படும் என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தனது பங்கு கடனை மட்டும் எப்படியாவது செலுத்திவிடுகிறேன் என்று கூறி பத்திரத்தை கேட்டிருக்கிறார் பூபதி. ஆனால், 3 பேரும் கடனை திருப்பி செலுத்தினால்தான் பத்திரத்தை தர முடியும் என்று வங்கி மேலாளர் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டதால் விரக்தியில் விவசாயி பூபதி, வங்கியின் முன்பு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பூபதியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories