தமிழ்நாடு

காவல் நிலைய பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் மட்டும் விழுந்து கை உடைவது ஏன்? : ஆர்.டி.ஐ மூலம் கேள்வி!

காவல் நிலைய பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் தடுக்கி விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவது குறித்து ஆர்.டி.ஐ மூலம் கேள்விகள் எழுப்பியுள்ளார் நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர்.

காவல் நிலைய பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் மட்டும் விழுந்து கை உடைவது ஏன்? : ஆர்.டி.ஐ மூலம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் சமீபகாலமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்படும் பலரும் கைகளில் கட்டுப்போட்டபடி புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது வழக்கமாகி வருகிறது.

செயின் பறிப்பு, திருட்டு வழக்கு, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கு, கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் வன்முறையில் ஈடுபட்டது, நெல்லையில் கடைகளில் கத்தியைக் காட்டி மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு, விசாரணைக் கைதிகள் கட்டுப்போட்டபடியான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வலம்வந்தன.

இதற்குக் காரணமாக, அவர்கள் பாத்ரூம்களில் வழுக்கி விழுந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. காவல்துறையினர் கூறும் இந்தக் காரணமும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. சிலர், போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

காவல் நிலைய பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் மட்டும் விழுந்து கை உடைவது ஏன்? : ஆர்.டி.ஐ மூலம் கேள்வி!

குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் கையை காவல்துறையினர் உடைப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிற ரீதியிலான குரல்களும் ஒலித்து வருகின்றன. இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, காவல் நிலையங்களில் உள்ள பாத்ரூம்களின் நிலை பற்றி ஆர்.டி.ஐ மூலம் கேள்விகள் கேட்டு காவல்துறை இயக்குனருக்கு மனு அளித்துள்ளார்.

அந்த ஆர்.டி.ஐ மனுவில், காவல்நிலையங்களில் உள்ள பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்ட காவலர்கள் கடந்த பத்து ஆண்டுகளில் எத்தனை பேர் என்ற விவரங்களை காவல்நிலையம் வாரியாகவும், மாவட்ட வாரியாகவும் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார்.

தொடர்ந்து, காவல்நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட விசாரணைக் கைதிகள் எத்தனை பேர் கடந்த பத்தாண்டுகளில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தையும் தனித்தனியே தரவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் அமையப்பெற்றுள்ள பாத்ரூம்களில் விசாரணைக் கைதிகள் விழாமல் இருப்பதற்காகவும், காவலர்கள் விழாமல் இருப்பதற்காகவும் என்னென்ன நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளன என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர், காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்ய எத்தனை பணியாளர்கள் பணிபுரிகிறார்கள்?

காவல்நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களை சுத்தம் செய்வதற்கு ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது?

தமிழ்நாட்டில் உள்ள காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து சென்று காவலர் சீருடையில் இல்லாத நபர்களால் கை, கால்கள் முறிக்கப்படுகிறது எனில் அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் எவ்வளவு?

காவல்நிலையங்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்து வந்து பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வகையில் எத்தனை காவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி காவல்துறை இயக்குனரிடம் பதில் கேட்டுள்ளார் வழக்கறிஞர் பிரம்மா.

banner

Related Stories

Related Stories