‘தமிழ்நாடு வெதர்மேன்’ எனும் புனைபெயர் கொண்ட வானிலை நிபுணரான பிரதீப் ஜான், மழை - வானிலை குறித்த தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்கி வருகிறார். இந்நிலையில், பிரதீப் ஜான், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மழைக்கும் அத்திவரதர் உற்சவத்திற்குமான தொடர்பு குறித்து விளக்கும் பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்ததனர். பருவ மழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் வெகுவாகக் குறைந்ததாலும், குடிநீருக்கு மிகப்பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதி மக்களும் காலி குடங்களோடு நீருக்காக அலையும் நிலை உருவானது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் மழை பெய்யத் தொடங்கியது.
இந்தப் பருவமழை காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் எழுந்தருளியதால் தான் என பக்தர்கள் புளகாங்கிதமடைந்தனர். அத்தி வரதரின் அருளால் மழை பொழிவதாகவும், அத்தி வரதர் எழுந்தருளிய போதெல்லாம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியதாகவும் சகட்டுமேனிக்கு தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.
இதில் உச்சமாக, ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், அத்திவரதர் மேலே வந்ததால்தான் மழை பொழிவதாகவும் , நாடும் மக்களும் நன்றாக இருக்க வேண்டுமெனில் அத்திவரதர் புதைக்கப்படாமல் மேலேயே இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்தி வரதரின் மகிமை காரணமாகத்தான் மழை பொழிவதாக பக்தர்கள் குதூகலித்திருக்கும் நிலையில், இதுகுறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான். அத்திவரதர் எழுந்தருளிய 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளைக் கணக்கில் கொண்டு இந்தப் புள்ளிவிவரத்தை முன்வைத்துள்ளார் பிரதீப் ஜான்.
அத்தி வரதர் இதற்கு முன்னர் எழுந்தருளிய காலகட்டத்தின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவ மழைப் பொழிவையும், சாதாரண ஆண்டுகளில் பெய்யும் மழையளவின் சராசரியையும் ஒப்பிட்டு, அத்தி வரதரின் வருகை எவ்வித மாறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை என விளக்கியுள்ளார் பிரதீப் ஜான்.
மூடநம்பிக்கையைக் கொண்டாடும் பக்தர்கள், இயல்பாக காலநிலை மாற்றத்தால் உருவான மழைப் பொழிவையும் அத்தி வரதரின் மகிமை என துதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உண்மையை வெளியிட்டுள்ள பிரதீப் ஜானின் இந்தப் பதிவு பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.