தமிழகத்தின் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் நிலவும் சுழற்சி காரணமாக வட தமிழகத்திலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தென் தமிழக மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸும் பதிவாகும் என வானிலை மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1 முதல் இதுவரை 24% மழையே பெய்திருப்பதாகவும் இது இயல்பை விடக் குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.