ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் இருந்த நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் இன்று வெளியில் வந்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவியான நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாத காலம் பரோல் வழங்கும்படி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். முதலில் நளினியின் பரோல் மனுவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நளினி தாமாகவே வாதாடினார்.
நளினியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட்டனர். இந்நிலையில் ஒரு மாத பரோலில் இன்று நளினி விடுவிக்கப்பட்டார். இன்று காலை வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த நளினி சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டில் தங்குவதற்காக போலீஸ் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
வீட்டுக்கு வந்த மகளை, நளினியின் தாயார் பத்மா ஆரத்தி எடுத்து வரவேற்றார். நளினியின் வருகையால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர். நளினியின் மகள் ஹரித்ரா லண்டனில் இருந்து விரைவில் வரவிருக்கிறார். கடந்த 2016ம் ஆண்டு நளினி, தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக 12 மணி நேர பரோலில் வெளியே வந்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் கிடைத்துள்ளது.