நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதியில் உள்ள தி.மு.க முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியின் வீடுபுகுந்து அவரையும், அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் படுகொலை செய்யப்பட்டனர். முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாவட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உமா மகேஸ்வரி மறைவு குறித்து இரங்கல் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கட்டிக் காப்பாற்ற முடியாத அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க நிர்வாகிகள் சமீப காலமாக படுகொலை செய்யப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என்றார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். வீரலட்சுமி, ஜோதிலட்சுமி, ராஜேஷ்வரி என்ற மாரியம்மாளின் 3 மகள்களும் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
கணவரை இழந்த மாரியம்மாள் வீட்டு வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது மகள்களை வளர்த்து வந்தார். மாரியம்மாளின் மறைவால் அவரது பிள்ளைகள் 3 பேரும் தாயை இழந்து நிர்கதியாக உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசு முன்வந்து உதவ வேண்டும் என்று பொதுமக்களும் அவரது உறவினர்களும் வேண்டுகோள் விடுகின்றனர்.
இந்நிலையில் மாரியம்மாள் குடும்பத்திற்கு உதவும் வகையில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மாரியம்மாள் இல்லத்திற்கு சென்ற பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.