தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தாமல் இருப்பதால் குடியா மூழ்கி விடப்போகிறது என்ற தொனியில் ஆளும் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. உண்மையில் கள நிலவரம் என்ன என்பதை விவரிக்கிறது இந்த புள்ளி விபரம்.
உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ. 3,558 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை கணக்கிட்டோம் என்றால் சுமார் 10,500 கோடி ரூபாய் வரை தமிழகத்திற்கு கிடைக்கவில்லை.
இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் உள்ளாட்சிப் பணிகள் முழுமையாக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதியை மத்திய அரசு ஆண்டுதோறும் இரண்டு தவணையாக தமிழக அரசுக்கு வழங்கி வருகிறது. இதனைப் பெற வேண்டுமானால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தவேண்டும் என மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் தோமர் கூறியுள்ளார்.
இதனால் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர் வழங்கல் பணி, கழிவு நீரகற்றல், சாலைகள் , மழைநீர் வடிகால் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
ஏற்கனவே, 14வது ஆணையத்தின் பரிந்துரைகளில், மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்திற்கான பங்காக வழங்கப்பட வேண்டிய தொகை கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
அது போதாதென உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தால் ஜனநாயகத்தின் ஆணி வேராகக் கருதப்படும் உள்ளாட்சி அமைப்புகள் கருகி விடும் வாய்ப்புள்ளது.
கோவை மாநகராட்சிக்குக் கிடைக்கவேண்டிய ரூ.60 கோடி கிடைக்காததால், அங்கு பணியாற்றிய 500 துப்புரவு பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மதுரையில் துப்புரவு பணியாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருச்சி, வேலூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளும், மற்ற நகர, ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலைக்கு தமிழக அரசே காரணம். மக்கள் நலன் பாதுகாத்திட உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.