தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினால் அது சட்டப்பேரவை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்ற மரபு உள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று, காவல்துறை மானியக்கோரிக்கை மீதாதன விவாதம் நடந்தது. அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ ராமசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிக் குறிப்பிடாமல், சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தடியடி உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.
“ வேன் மீது ஏறி நின்று போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்? ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டுமானால் அதற்கு எத்தனையோ நடைமுறைகள் இருக்கும்போது, இந்த துப்பாக்கி சூடு நடத்தியது எவ்வாறு?” எனக் கேள்விகளை எழுப்பினார் ராமசாமி.
அதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “வேன் மீது ஏறி நின்று யாரும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. வேன் மீது ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சொல்லப்படுவது ஒரு கற்பனைக் கதையே. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ-யும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றன. விசாரணைகளின் முடிவில்தான் முழு விபரம் தெரியவரும்” என்றார்.
வேன் மீது நின்று போலீசார் குறிபார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி தமிழகத்தையே உலுக்கிய நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறுவது கற்பனைக் கதை என எடப்பாடி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஒருபுறமிருக்க, தி.மு.க எம்.எல்.ஏ ஐ பெரியசாமி, சி.பி.ஐ வசம் குட்கா வழக்கு ஒப்படைக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி குறித்து விமர்சனத்தை முன்வைத்தார். நீதிபதி குறித்து முதல்வர் சட்டமன்றத்திலேயே விமர்சித்தது சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து முதல்வரின் விமர்சனத்தை சபைக் குறிப்பில் நீக்குவதாக சபநாயகர் தெரிவித்தார்.