வளிமண்டலத்தின் கீழடுக்கில், வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள் மாவட்டம் வழியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனத்தின் காரணமாகவும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய வட தமிழக மாவட்டங்களிலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதி மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்தார்.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கடந்த ஜூன் 1 முதல் இன்று வரை தமிழக மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு 6 செ.மீ என்றும், இது இயல்பு அளவான 9 செ.மீ அதாவது 31 சதவிகிதம் குறைவு என அவர் கூறினார்.
இதற்கிடையே, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், சென்னையில் பரவலாக டமால் டுமீல் அதாவது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அவருக்கே உரிய பாணியில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் புயலுக்கான வாய்ப்பில்லை என்றும், மழை மட்டுமே பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், ஜூலை 19 முதல் 23 வரை கேரளா, கர்நாடகாவிலும் கனமழையும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளாவில் பலத்த மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளார்.