சரவணபவன் உணவகத்தில் பணிபுரிந்த மேலாளரின் மகளை மூன்றாவதாக திருமணம் செய்ய விரும்பியுள்ளார் உரிமையாளர் ராஜகோபால். இதற்கு சம்மதிக்காத ஜீவஜோதி பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்தார்.
இதனையடுத்து ஆத்திரத்தால் கூலிப்படைகளை ஏவி ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்துள்ளார் சரவணபவன் ராஜகோபால். இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ராஜகோபாலுக்கு முதலில் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த ராஜகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. எனவே ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார் ராஜகோபால். அப்போது வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தியதோடு உடனடியாக ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
பின்னர், உடலநலக் குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜகோபால் ஆம்புலன்சில் வந்து உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ராஜகோபாலின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கக் கோரி அவரது மகன் சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கும் தமிழக அரசுக்கும் ராஜகோபாலின் உடல்நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதனையடுத்து அறிக்கை தாக்கல் செய்த மருத்துவமனை நிர்வாகம், ராஜகோபாலை இடமாற்றம் செய்வதால் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசு மருத்துவர்களால் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ளது. பின்னர், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்தது உயர்நீதிமன்றம்.
சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு ராஜகோபாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதற்கிடையே ஒரு நாள் கூட சரவணபவன் ராஜகோபால் சிறையில் அடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.