ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற மத்திய அரசு திட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்வதைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்களை மீறி தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியை பாலைவனமாக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது மத்திய பா.ஜ.க அரசு. இதற்கு மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு செவிசாய்த்து வருகிறது.
ஆனால் சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என வாய்ச்சவடால் விட்டுவிட்டு, அத்திட்டங்களுக்கு அதிராக போராடும் மக்களை கைது செய்து அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறது அ.தி.மு.க அரசு.
இதனையடுத்து, போராடுவோர் மீது வழக்குப்பதிவு செய்வதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் சட்டப்பேரவையை முற்றுகையிடும் நோக்கில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்டனர். அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், தொடர்ந்து போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினரை கைது செய்து 2 பேருந்துகளில் ஏற்றிச் சென்ற போலீசார் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.