கும்பகோணம், கொரநாட்டு கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் எழிலன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கும்பகோணத்தில் விரைவில் ‘மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா’ நடைபெறும் என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு இரு தரப்பினருக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கள்ளப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் முருகவேல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது, மதகலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொள்வது, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து எழிலனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். இதனையடுத்து எழிலனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சமீபத்தில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒருவர் தனது பேஸ்புக் கணக்கில் மாட்டிறைச்சி சூப் உட்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதற்காக இந்துத்துவா கும்பலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், மாட்டிறைச்சி திருவிழா நடத்தப்பட வேண்டும் என்று கூறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.