மதுரையைச் சேர்ந்த நந்தினியும் அவரது தந்தை ஆனந்தனும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், ஜூலை 5-ம் தேதி, நந்தினிக்கும் அவரது காதலர் குணா ஜோதிபாஸ் என்பவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, 2014ம் ஆண்டு டாஸ்மாக்கிற்கு எதிராக போராட்டம் நடத்தியதால், நந்தினி மீதும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டிருந்தது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது நந்தினி, ஐ.பி.சி. 328-ன்படி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார். இதனைத் தொடர்ந்து அவர் மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து இருவரும் கைதுசெய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கைதுசெய்யப்பட்ட நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோருக்கு திருப்பத்தூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வ கோயிலில் நந்தினிக்கும், குணா ஜோதிபாஸுக்கும் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், டாஸ்மாக்கை மூடக்கோரி தேர்தல் நடைபெற உள்ள வேலூரில் போராட்டம் நடத்த உள்ளதாக நந்தினி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், '' சிறை என்பது நமக்குப் பல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கிறது. சமுதாயத்தில் நடக்கக் கூடிய பிரச்னைகளின் பிரதிபலிப்பாகத் தான் சிறை உள்ளது. 13 நாள் சிறைவாசம் என்பது எனக்கு தைரியத்தையும், உறுதியையும் கொடுத்துள்ளது.
கொலை, திருட்டு, தவறான உறவுமுறைகளால் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுக்கு எதனால் இப்படி ஆனது எனக் கேட்டு நான் நிறைய பேரிடம் பேசினேன். அதில் பெரும்பாலான பெண்கள் சொன்னது, கணவர்களின் குடிப்பழக்கம்தான். குடும்பத்தை அந்த குடிப்பழக்கம் சீரழித்ததால்தான், பெண்களையே குற்றவாளிகளாக சிறைக்குள் தள்ளி, இவர்களின் குழந்தைகளை அனாதைகளாக மாற்றியிருக்கிறது.
எனது தந்தை இருந்த ஆண்கள் சிறையில் 80 சதவீதம் குற்றவாளிகள் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருந்தார்களாம். அவர்கள் குடித்துவிட்டு போதையில் கொலை செய்ததாகச் சொல்லியுள்ளனர். தமிழகத்தை குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றி கொண்டிருக்கிறது தமிழக அரசு. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நீதித்துறையோ, இதை கண்டுகொள்ளாமல் டாஸ்மாக்கை மூட உத்தரவிடாமல் உள்ளது. தமிழக அரசும் நீதித்துறையும் சேர்ந்து குடி என்கிற ஒரு விஷயத்தை வைத்து மக்களை நாசப்படுத்திக் கொண்டுள்ளனர்.
வேலூர் தொகுதியில் ஆகஸ்ம் 5ம் தேதி தேர்தல் நடைப்பெற உள்ளது. வேலூர் தொகுதியில் வீடு வீடாக சென்று மக்களை தனித்தனியாக சந்தித்து, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறோம். மக்களை ஒன்றுதிரட்டி வேலூர் தொகுதியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் '' இவ்வாறு தெரிவித்துள்ளார்.