சரவண பவன் ஹோட்டலில் பணியாற்றிய ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் கடந்த 2001ம் ஆண்டு சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
10 ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்காமல் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் 10 ஆண்டு தண்டனை ஆயுள் தண்டனையாக மாறியது. அதனை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதியானது.
இதனையடுத்து, ராஜகோபாலுடன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட 5 பேரில் மூவருக்கு 3 ஆண்டுகள் சிறையும், இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. மேலும், ஜூலை 8ம் தேதிக்குள் அனைவரும் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என ஆணையிட்டது.
இந்த நிலையில், ராஜகோபாலை தவிர எஞ்சிய ஐவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நல பாதிப்பு எனக் கூறி ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டிருந்தார் ராஜகோபால். இது தொடர்பாக விசாரணைக்கு வந்த போது, இதுநாள் வரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படாத போது ஆஜராகும் போதுதான் பாதிக்கப்பட்டுவிட்டதா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பின்னரும், இத்தனை நாள் வெளியேதானே இருந்தீர்கள். ஏன் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், எந்த விளக்கத்தையும், கோரிக்கையையும் ஏற்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்து உடனடியாக சரணடையுமாறு அதிரடி உத்தரவும் ராஜகோபாலுக்கு விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் வந்தபடி நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
தமிழகம் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் கிளை பரப்பி, தனி சாம்ராஜ்யம் அமைத்தவர் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் ராஜகோபால். ஆனால், ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதற்கேற்ப, இத்தனை ஆண்டுகள் ஆகியும் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் நீதியால் அவர் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாக அமைந்துள்ளது.