சமீபகாலமாக சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவது போலிஸாருக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காவல்துறை உயர் அதிகாரிகள் செயின் பறிப்பு சம்பவங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய உத்தரவிட்டதை அடுத்து, கடந்த சில தினங்களில் பல்வேறு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான இரண்டு புகைப்படங்கள் போலிஸாரின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சென்னையில் செயின் பறிப்பு மற்றும் செல்போன் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இளைஞர்கள் அனைவரின் கைகள் உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. இது அவர்கள் கழிவறையில் குளிக்கும்போது வழுக்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்ட 10 பேரும் ஒரே நேரத்தில் கீழே விழுந்து கையை உடைத்து கொள்வது சாத்தியமில்லை என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் மது போதையில் காரில் வந்த வாலிபர், அங்கிருந்த நடைபாதையில் மோதி விபத்தை ஏற்படுத்தினார். அப்போது அங்கு வந்த போலிஸாரை மதுபோதையில், கேவலமான வார்த்தைகளில் திட்டினார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆனது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அடுத்தநாள் வெளியான புகைப்படத்தில் அவரது கை உடைந்து இருந்தது.
எனவே, போலிஸார் இதுபோன்ற குற்றவாளிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக கை, கால்களை உடைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஆதரவாக ஒரு சிலர் கருத்து தெரிவித்தாலும், குற்றவாளிகளைத் தண்டிக்க நீதித்துறையும், நீதிமன்றமும் இருக்கும்போது போலிஸார் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறு என்று பலர் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், எப்படி ஒரே நேரத்தில் 10 பேரும் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள்? அனைவரும் ஒன்றாக குளித்தார்களா? என்று பலர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். ஆனால், இதுகுறித்து காவல்துறை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.