ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிசந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
தண்டனை காலத்துக்கு மேல் சிறையில் இருப்பதால் தங்களை விடுவிடுக்குமாறு ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவர்களது விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 10 மாதங்களாகியும் அது குறித்து ஆளுநர் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து அவரது தாய் அற்புதம்மாள் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ''வயித்தில குழந்தை இருக்குன்னு தெரிஞ்ச உடனே தாய்க்கு வர்ற பதட்டம் 10 மாசம் கழிச்சு பரவசமா மாறுது. விடுதலை கோப்பு ஆளுநருக்கு போய் இன்னையோட 10 மாசம் முடியுது. என் பதட்டம் தணியல. எங்க துக்கம் ஏன் யாருக்கும் புரியல? '' என உருக்கமான உணர்வை பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.