தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இங்கு மருத்துவமனை செயல்படுகிறது. 280க்கும் மேற்பட்ட செவிலியர், 170க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் என பணியாற்றிவருகின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு 1000க்கும் மேற்பட்டோர் தினமும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 200க்கும் மேற்பட்டோர் அங்குத் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் என்கிற முதியவர் பாம்பு கடித்ததால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
ஆதரவற்ற முதியவருக்கு முறையிலான சிகிச்சை அளிக்காமல், மருத்துவமனை ஊழியர்கள் அவரை தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அச்சுறுத்தலுக்குப் பயந்து 3 நாட்களுக்கு முன் வார்டு பகுதியிலிருந்து வெளியே வந்துவிட்டார்.
அவர் வீட்டிற்கு செல்லமுடியாததால், அவசர சிகிச்சை அறைக்குப் பின்புறம் பகுதியில் கேட்பாரற்று ஆதரவற்று கிடக்கிறார். அவருக்குப் பாம்பு கடித்து காயம் ஏற்பட்ட பகுதியில் பூச்சிகள், ஈக்கள் மொய்க்கும் நிலையில் அவர் கிடப்பது போன்ற புகைப்படம் மனவேதனையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நிர்வாகத்திடம் கூறியுள்ளார். ஆனால் நிர்வாகம் அதற்கு போதிய கவனம் செலுத்தாமல் அவரை கடந்து சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த மருத்துவமனை ஊழியர்களுக்குப் பணம் கொடுத்து உதவினால் மட்டும் தான், ஊசி, மருந்து போடுவது போன்ற சிகிச்சையை மேற்கொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.
மேலும், ஆதரவற்று வருபவர்களை உளவியல் ரீதியாக அவர்களுக்குத் தொல்லை கொடுத்தும், சில நேரங்களில் அடித்து விரட்டும் வேலையை செய்கின்றார்கள். தனியார் மருத்துவமனையில் பணம் வசூல் செய்வது போன்று செயல்பட்டு வரும் இந்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, கல்லூரி நிர்வாகத்தை நிர்வகிக்கத் தனிக்குழுவை மாவட்ட நிர்வாகம் அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.